மஹாகாலா ஓங்காரா மஹேஷ்வரா
மஹாகாலா ஓங்காரா மஹேஷ்வரா
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியான அம்பலவாணன் அழகான ஒளிப்பிழம்புகளாகத் தோன்றிய தலங்களே ஜோதிர்லிங்க ஸ்தலங்களாக அறியப்படுகின்றன.பக்தர்களுக்கு அருளும்பொருட்டு பரமன் இவ்வாறு எழுந்தருளிய பனிரெண்டு தலங்களை கீழ்க்கண்ட பாடல் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சௌராஷ்ட்ரத்தில் சோமனாதர், ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனர், உஜ்ஜயினியில் மஹாகாலர், ஓம்காரத்தில் மாமலேஷ்வர்,பராலயத்தில் வைத்யனாதர், தாக்கினியில் பீமாசங்கர்,சேது பந்தத்தில் ராமேஷ்வரர், தாருகாவனத்தில் நாகேஷ்வரர், வாராணசியில் விஸ்வநாதர், கௌதமீத்த்தில் த்ரம்யபகேஷ்வரர், ஹிமாலயத்தில் கேதாரநாதர், வேருலத்தில் க்ரிஷ்னேஷ்வரர்.
இந்த பன்னிருவரை தரிசித்தாலும்
தலவரலாறுகளைப் படித்தாலும் மனமுருகி நினைத்தாலும் போதும் ஏழு பிறவிகளில் இழைத்த
பாவங்கள் மறைந்தோடி விடும் என்பது நம் ஆன்றோர் வாக்கு.
பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில்
இப்போது நாம் பார்க்கவிருப்பது மஹாகாலேஷ்வரர் மற்றும் ஓங்காரேஷ்வரர்
எழுந்தருளியுள்ள தலங்கள். மத்தியபிரதேச மாநிலத்தில்
இந்தூர் நகரிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் மஹாகாலேஷ்வர் ஆலயம் அமைந்துள்ள
உஜ்ஜயினி நகரை அடைந்து விடலாம். ஷிப்ரா நதிக் கரையில் அமைந்துள்ள உஜ்ஜயினி நகரம், அமராவதி இந்த்ரபுரி அவந்திகா
என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டு வந்தது. சனாதன தர்மத்தில் மோக்ஷபுரிகளாக கருதப்படும் ஏழு நகரங்களான அயோத்தி மதுரா, மாயா (ஹரித்வார்) காசி, காஞ்சி, அவந்திகா, த்வாரகை ஆகிய நகரங்களில் உஜ்ஜயினி என்ற
அவந்திகாவும் இடம் பெற்றிருந்தது. உஜ்ஜயினி என்ற பெயரைக் கேட்டவுடன் நமக்கு
விக்ரமாதித்தன் என்ற அரசனும் அவன் வழிபட்ட மஹாகாளியும் நினைவுக்கு வருவது இயல்பு.
உஜ்ஜயினி மஹாகாலேஷ்வர் சுயம்புவாக தோன்றியவர். உஜ்ஜயினி மாமன்னர் சந்த்ரசேனர் சிறந்த சிவபக்தர்.அவர் சிவபெருமானை வழிபடுவதைப் பார்த்த ஓர் ஐந்து வயது சிறுவன் ஸ்ரீகரன் தானும் ஒரு கல்லை சிவபெருமானாக பாவித்து அதற்கு நாள்தோறும் தவறாமல் பூஜைகளை செய்து வந்தானாம். ஊர் மக்களின் நையாண்டியும் கிண்டலும் அவனைப் பாதிக்கவில்லை. என் கடன் உன் பணி செய்வதே என்ற கோட்பாட்டில் நாள் தவறாமல் சிவபூஜையில் தன் சிந்தையைச் செலுத்தி வந்தான் அந்த பாலகன். நாட்கள் உருண்டோடின.சிவபிரானை தரிசிக்கும் பாக்கியம் நமக்கு கிட்டுமா என்ற ஏக்கத்தில் வாடிய இளஞ் சிறுவனின் துயர் களைய ஒளிப் பிழம்பாகத் தோன்றினார் மஹா காலேஸ்வரர். யான் பெற்ற இப்பெரும் பேறு இந்த வையகத்திற்கும் கிட்ட வேண்டும் என்று ஸ்ரீகரன் வேண்ட,அதை ஏற்று அப்பகுதியில் கோயில் கொண்ட மஹாகாலேஸ்வரர் இன்றளவும் காணவரும் அன்பர்கள் கேட்கும் அனைத்தையும் அருளிக்கொண்டிருக்கிறார்.
மஹாகாலேஸ்வரர் கோயில் ஐந்து நிலைகள் கொண்டது.பாதாள நிலையில் அம்பாள் பார்வதி வடக்கு நோக்கியும் விநாயகர் மேற்கு நோக்கியும் கார்த்திகேயன் எனப்படும் முருகப் பெருமான் கிழக்கு நோக்கியும் நந்தி தெற்கு நோக்கியும் திசைக்கு ஒருவராக கோயில் கொண்டிருக்கிறார்கள். பூமியை ஒத்த நிலையில் ஐயன் மஹா காலேஸ்வரர் உஜ்ஜயினி மாமன்னராக மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.அவருக்கு மேலுள்ள நிலையில் ஒம்காரேஷ்வரரும் அதற்கு மேலுள்ள நிலையில் நாஜகபஞ்சமி அன்று மட்டும் தரிசனம் அளிக்கும் நாகசந்த்ரேஸ்வரரும் வீற்றிருக்கிறர்கள்.
கோபுரங்கள் அருமையான
வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. மஹாகாலர் சுயம்பு என்பதால்
அவருக்கு உள்ளிருந்தே சக்தி பரவுகிறது. மூலவருக்கு
சக்தியூட்டுவதற்கு வெளி காரணிகள் தேவையில்லையாம். அதிகாலை 4
மணிக்கு செய்யப்படும் பஸ்ம ஆரத்தி அதாவது சாம்பல் அபிஷேகம் மிகவும்
புகழ் பெற்றது. மற்றபடி இந்த கோயிலில் விரைவில் தரிசனம்
செய்ய வேண்டும் என்றால் ஆன்லைனில் சீக்ர தர்ஷன் என்ற 300 ரூபாய்க்கான
டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம். அதற்கான படிவத்தைப் பூர்த்தி
செய்து நமது ஆதார் விவரங்களை பதிவேற்றி பணம் கட்டினால் பார் கோடுடன் தரிசனம்
செய்வதற்கான நாள் மற்றும் நேரத்துடன் நுழைவு டிக்கெட் கிடைத்து விடுகிறது.
மேலும் ஒரு சுவையான செய்தி. மஹாகாலேஸ்வரர்
அப்பகுதியின் மஹாராஜா என்பதால் வேறு எந்த அரச வம்ச வாரிசுகளோ பிரதமரோ
முதலமைச்சர்களோ கோயிலுக்குச் சென்று ஆண்டவரைத் தரிசிக்கலாம். ஆனால் இரவு உஜ்ஜயினியில் தங்கக் கூடாது. மீறி
தங்கினால் அவர்கள்து பதவி பறிபோய்விடும் என்று ஓர் ஐதீகம் உள்ளது. சிந்தியா ஹோல்கர் அரசகுல வாரிசுகள் இன்றளவும் உஜ்ஜயினியில் இரவு
தங்குவதில்லை.
12 ஜோதிர்லிங்கங்களில்
தெற்கு நோக்கி யிருக்கும் ஒரே லிங்கம் மஹாகாலேஸ்வரர்தான். காலம்
என்பதற்கு நேரம் மரணம் என்று இரு பொருட்கள் உண்டு அதனால்தான் மூலவரான மஹாகாலர்,எமனின் திசையான தெற்கு நோக்கி அமர்ந்து தன்னைக் காண வரும் பக்தர்களின்
நோய்களைப் போக்கி நற்கதிக்கு வழி செய்து கொண்டிருக்கிறார்.
ஜோதிர்லிங்கமான மஹாகாலேஸ்வரருக்கு
எத்தனை மஹத்துவம் உள்ளதோ அதற்கு சற்றும் குறையாத
மகிமையுடைய மற்றொரு கோயில் சக்திபீடமான ஹர்சித்தி மாதா கோயில் அல்லது காளிகா
கோயில். 52 சக்தி
பீடங்களில் சக்தியின் முன்கை விழுந்த இடமாக இது கருதப் படுகிறது. த்வாபர யுகத்தில் கிருஷ்ணர் ஜராசந்தனை வதைப்பதற்காக தனது குல தேவி
ஹர்சித்தி மாதாவின் கோயிலுக்குச் சென்று அவளருள் வேண்டியதாக ஒரு புராணம் உள்ளது. விக்ரமாதித்ய மாமன்னன் த்வாரகை சென்ற போது அந்த கோயிலுக்குச் சென்று
அம்மையை தன்னுடன் உஜ்ஜயினி வருமாறு கோரியதாகவும் அம்பாளும் விக்ரமாதித்தனுடன்
உஜ்ஜயினிக்கு வந்து குடியேறியதாகவும்
சொல்லப்படுகிறது.
உஜ்ஜயினியில் ஜோதிர்லிங்கமான மஹாகாலேஸ்வர் கோயில் சக்தி பீடமான ஹர்சித்தி மாதா கோயில் ஆகியவை தவிர செவ்வாய் கிரஹம் அவதரித்ததாகக் கூறப்படும் மங்களநாதர் கோயில், காலபைரவர் கோயில், சிந்தாமணி கணேஷ் கோயில்ஆகிய பல கோயில்கள் உள்ளன.
கிருஷ்ணர் குசேலருடன் கல்வி
பயின்ற இடமான சந்தீபனி ஆஸ்ரமும் இங்குதான் அமைந்துள்ளது
உஜ்ஜயினியில் உள்ள கோயில்களைப் பார்த்துவிட்டு அடுத்து நாம் செல்லவிருக்கும் இடம் ஓங்காரேஷ்வர் கோயில்.நர்மதா ஆற்றில் உள்ள தீவான மாந்தாதாவில் ஓங்காரேஷ்வர் மற்றொரு ஜோதிர்லிங்கமாக அமர்ந்து அருட்பாலிக்கிறார். வானிலிருந்து பார்த்தால் இத்தீவு ஓங்கார வடிவில் இருப்பதால் இப்பகுதி ஓங்காரேஷ்வர் என்று அழைக்கப்படுகிறது
இக்கோயிலின் முன்பு நந்தி மண்டபத்தில் பெரிய நந்தி அமைந்துள்ளது. கோயிலானது மூன்று அடுக்குகளாக அமைந்துள்ளது. முதல் தளத்தில் உள்ள குறுகலான கருவறையில் பார்வதி தேவியுடன் ஓங்காரேசுவரர் சிறிய லிங்கவடிவில் உள்ளார். இரண்டாவது தளத்துக்குப் படிக்கட்டுகள் வழியாகச் சென்றால் அங்கு மஹாகாலர் லிங்கவடிவில் உள்ளார். அதன் எதிரே ஒரு மண்டபம் உள்ளது. அங்கே இந்த லிங்கத்தை வழிபட்ட இராமனின் மூதாதையரான மாந்தாதாவின் சிலை உள்ளது. மூன்றாவது தளத்தில் சித்தீசுவர லிங்கம் உள்ளது.

நாங்கள் ஒம்காரேஷ்வர் சென்றதற்கு முந்தைய தினம்தான் 108 அடி உயர ஆதி சங்கரரின் உருவச்சிலை மத்தியபிரதேச முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. விந்திய மலைத்தொடரின் ஒரு மலை மேல் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதால் தொலைவிலிருந்தே இந்தச் சிலையைக் கண்டு வணங்க முடிகிறது.
ஓங்காரேஸ்வரர் கோயிலை நர்மதா நதியில் படகு மூலம் வலம் வரலாம். இதை நர்மதா பரிக்ரமா என்று அழைக்கிறார்கள். 2 கோயில்கள் பார்க்க வேண்டும் படகில் ஆலயத்தை வலம் வரமுடியுமா என்று பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் 2 நாட்கள் ஓங்காரேஷ்வரில் தங்குவதாகத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் நாங்கள் அங்கு சென்று சேர்வதற்கு 3 நாட்கள் முன்னதாகத்தான் நர்மதா நதியில் முன்பு ஏற்பட்டிராத அளவிற்கு பெரும் வெள்ளம் வந்த காரணத்தால் படகு சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இங்கும் சீக்ர தர்ஷன் டிக்கெட் வாங்கியிருந்ததால் விரைவில் தரிசனம் செய்ய முடிந்தது. அதனால் அங்கிருந்து அருகில் உள்ள மஹேஷ்வர் என்ற இடத்திற்குச் சென்று வரலாம் என்று முடிவு செய்தோம்.ஓம்காரேஷ்வரிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மஹேஷ்வர் என்ற நகரம். போகும் வழியில் மண்டலேஷ்வர் என்ற சிறிய நகரத்தில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்தைப் பார்த்துவிட்டு செல்லலாம் என்று ஓட்டுனர் கூற, நர்மதை படித்துறையில் உள்ள அந்த ஆலயத்தைக் காண இறங்கினோம்.அங்கு பூஜை செய்பவர் வங்கி அதிகாரியாக இந்தூரில் வேலை செய்பவராம். அவர் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினர் அனைவரும் பண்டிகை நாட்களில் ஆலயத் தொண்டுக்காக வந்து விடுவார்களாம். அண்மையில் வெள்ளம் வந்தபோது ஸ்ரீராமர் ஸ்ரீலக்ஷ்மணர் ஸ்ரீ சீதை ஸ்ரீ ஆஞ்சனேயர் ஆகியோரின் பளிங்கு சிலைகள் இடுப்பு வரை வெள்ள நீரில் மூழ்கிவிட்டனவாம். அதனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூடி கோயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.பூஜை செய்பவரின் பாட்டனார் ராஜாராம் விஷ்ணு மோடக் மஹாராஷ்ட்ராவில் பெரும் ஜமீந்தார் ஒருவரின் ஒரே வாரிசாம்.இளம் வயதில் தந்தை இறந்துவிட, தாய் அந்த பால்கனை உறவினரின் சதியிலிருந்து காப்பாற்றும்படி குரு கோந்த்வ்லேகர் மஹராஜ் என்ற துறவியிடம் வேண்டினாராம்..குரு அவரிடம் உனக்கு மகன் வேண்டுமா, பணம் வேண்டுமா என்ற ஒரே ஒரு கேள்விதான் கேட்டாராம். அந்த தாய் மகன் உயிரோடு இருந்தால் போதும் என்றவுடன் குரு அந்த பாலகனை தன்னுடன் வைத்துக் கொண்டு ஆன்மீக ஞானத்தையும் கல்வியையும் கற்பித்து எந்தவித இன்னலும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டாராம்.குரு இட்ட கட்டளையின் பேரில் ராஜாராம் மோடக் மண்டலேஷ்வரில் ஸ்ரீராமர் ஆலயத்தைக் கட்டினாராம். தெய்வங்களின் பளிங்கு உருவச்சிலைகள் அழகோ அழகு! கோவில் கதவுகளின் மரவேலைப்பாடுகள் கண்கவரும் அழகோடு அமைந்திருந்தன.
மண்டலேஷ்வரிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள நகரம் மஹேஷ்வர். இது ராஜராஜேஷ்வர் கோயிலுக்கும் அகல்யாபாய் ஹோல்கர் கோட்டைக்கும் மஹேஷ்வரி கைத்தறி சேலைகளுக்கும் புகழ்பெற்றது.
ராஜராஜேஷ்வர் கோயில் மிகவும் புராதானமான கோயிலாக அறியப்படுகிறது.கார்த்தவீர்யார்ஜுனன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்த மஹேஷ்வர் நகரம் வேத காலத்தில் மஹிஷ்மதி என்று அழைக்கப்பட்டு வந்தது.திருமால் கையில் ஏந்தியுள்ள சுதர்சன சக்கரம் தனது வலிமை குறித்து பெருமை கொண்டதாம். சங்குசக்கரதாரி அறியாதது எதுவும் ஈரேழு உலகிலும் இருக்க முடியுமா? சுதர்சனரை அழைத்து சிறிது காலம் கார்த்தவீர்யாஜுனன் என்ற பெயரில் மஹிஷ்மதியை ஆட்சி செய்து வரும்படி பணித்தாராம். ஆயிரம் கைகளுடன் தோன்றியதால் சஹஸ்ரார்ஜுனன் என்ற பெயரும் அவருக்கு இருந்தது. அவருக்கு 500 மனைவிகள் இருந்தனராம். ஒரு முறை அவரது மனைவிகள் அனைவரும் நர்மதை நதியில் ஜலக்ரீடை செய்ய்வெண்டும் என்று விரும்பியதால் அரசன் தனது ஆயிரம் கைகளையும் பரப்பி நதிநீரைத் தடுத்து நிறுத்தினானாம். பெண்கள் குளித்து முடித்தவுடன் கைகளை விலக்கிக் கொள்ளவே நதிநீர் வேகமாகப் பாயத் தொடங்கியது.அப்போது சற்று தொலைவில் கைலாயத்திலிருந்து இலங்கை திரும்பிக் கொண்டிருந்த இராவணன் வழியில் நர்மதை நதிக்கரையில் இறங்கி தனது அன்றாட வழிபாட்டிற்காக ஒரு மணல் லிங்கத்தை உருவாக்கி அதற்கு பூஜை செய்து கொண்டிருந்தான். ஓடிவந்த நதிநீர், லிங்கத்தை அடித்துச் செல்ல, இராவணனுக்கு வந்ததே கோபம்.இதற்கு யார் காரணம் என்று அறிந்து கார்த்தவீர்யாஜுன்னுடன் போர் புரிய ஆரம்பித்தான். ஆனால் போரில் ராவணனைத் தோற்கடித்த கார்த்தவீர்யாஜுனன் அவனது 10 தலைகள் மற்றும் ஒரு கரத்தின் மீது விளக்குகளை வைத்து அழுத்தினானாம்.
கார்த்தவீர்யாஜுனன் ஒருமுறை வேட்டைக்குச் சென்ற போது காமதேனு என்ற தெய்வீக பசு ஜமதக்னி முனிவரின் ஆஸ்ரமத்தில் இருந்ததைப் பார்த்தார்.அதை அபகரிக்க முயன்றபோது தொடர்ந்த சண்டையில் தவறுதலாக ஜமதக்னி முனிவர் கொல்லப்பட்டார். இதை அறிந்த முனிவரின் மகனான பரசுராமர் கோபம் கொண்டு கார்த்த வீர்யாஜுனரின் ஆயிரம் கைகளையும் வெட்டி அவரைக் கொன்று விட்டதாக வரலாறு கூறுகிறது. திருமாலின் அவதாரமான பரசுராமர் கையால் வதம் செய்யப்பட்ட கார்த்தவீர்யாஜுனர் மஹிஷ்மதியின் ராஜராஜேஷ்வருடன் ஒன்றறக் கலந்து விட்டதாகவும் சிவபெருமான் மஹேஷ்வர் நகரில் அவரையும் தன்னைப்போல சிவமாக வழிபடுவார்கள் என்று வரமளித்ததாகவும் தலவரலாறு கூறுகிறது
கார்த்தவீர்யாஜுனர் ராவணனின் தலையில் விளக்குகளை
வைத்து அழுத்தியதைக் குறிக்கும் விதமாக பல நூற்றாண்டு காலமாக ராஜராஜேஸ்வரர் கோயிலில் 11 அணையா விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன.கருவறை முழுவதும் கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருப்பதால் கம்பிக் கதவு மூடியிருந்தாலும் அகண்ட தீபங்களைக் கண்ணாடியில் கண்டு தரிசிக்க முடிகிறது. இந்த தீபங்கள் எரிவதற்காக பக்தர்கள் நெய் டின்களைக் காணிக்கையாகக் கொண்டு குவிக்கிறார்கள்.இந்த நெய் டின்களை சேமித்து வைப்பதற்கென ஓர் இரண்டடுக்கு கட்டடம் தனியாகக் கட்டப்பட்டுள்ளது
ராஜராஜேஷ்வர் கோயிலிலிருந்து வெளியே வந்தால் சிறிது தொலைவில் ராணி அஹல்யாபாய் ஹோல்கரின் கோட்டை உள்ளது. மால்வா இளவரசர் காண்டேராவை தனது 8 வயதில் மணம் புரிந்த அஹல்யா, மாமியார் கௌதமபாயின் அரவணைப்பில் வளர்ந்தார். அரசகுல பழக்க வழக்கங்கள், நிர்வாகம், கணக்குவழக்கு, அரசியல் ஆகிய அனைத்தையும் மாமியாரிடம் இருந்து கற்றுக் கொண்ட அஹல்யா தனது மாமனாருக்கும் கணவருக்கும் நிர்வாகத்தில் உதவியாக இருந்தார்.
1754 ஆம் ஆண்டு பரத்பூர் அரசருடன் நடந்த போரில் அஹல்யாவின் கணவர் காண்டேராவ் ஹோல்கர் வீர்கதி அடந்தார். 29 வயதான அஹல்யா கனவருடன் உடன்கட்டை ஏற முடிவு செய்தார். ஆனால் அவரைத் தடுத்து நிறுத்திய மாமனார் மாலேராவ் ஹோல்கர், அரசு நிர்வாகத்திலும் ராணுவ அமைப்பிலும் பயிற்சி அளித்து அஹல்யாவை அரசு கட்டிலில் அமர தகுதியுடையவராக்கினார். அவரது ஒரே மகனும் இளம்பருவத்தில் மரணமடைய அஹல்யா அரியணையில் அமரநேரிட்டது.
மஹேஷ்வர் நகரில் திரும்பிய இடமெல்லாம் மஹேஷ்வரி
கைத்தறி சேலைகள் விற்கும் கடைகள். பட்டு மற்றும் பருத்தி இழைகளால் நெய்யப்படும் இந்த கைத்தறி
சேலைகள் உலகப் புகழ் பெற்றவை. மஹேஷ்வரி சேலைகளும் 18 ஆம் நூற்றாண்டில் அஹல்யா மஹாராணியின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டன.
அரச மாளிகைக்கு வரும் விருந்தினர்களுக்குப் பரிசளிப்பதற்காக ராணி அஹல்யா, சூரத் மற்றும் மால்வா பகுதிகளிலிருந்து நெசவாளர்களை வரவழைத்து 9 கஜ புடவைகளை நெய்து தரும்படி பணித்தார். இந்த சேலைகள்
மஹேஸ்வரி சேலைகள் என்ற பெயரில் புகழ்பெறத் தொடங்கின. மஹேஷ்வரி
சேலைகளின் கரை இருபுறமும் ஒரே மாதிரி இருப்பதால எந்த பக்கமும் மேலே வைத்துக் கட்டிக்
கொள்ளலாம். பட்டும் பருத்தியும் சேர்ந்து நெய்யப்படுவதால் சேலைகள்
மிக லேசாக இருக்கின்றன.
மஹேஷ்வர் பயணத்தை முடித்துக் கொண்டு மனநிறைவுடன்
இந்தூர் வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் காலைதான் விமானம் என்பதால் இந்தூர் நகரத்தைச்
சுற்றிப் பார்க்க புறப்பட்டோம். மிகவும் தூய்மையாகப் பராமரிக்கப்படும்
நகரம். ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் தூய்மை நகர விருதைத் தட்டிச்
செல்லும் நகரம். நடைபாதையில் பொருட்களை விற்கும் வண்டிகள் அனைத்தும்
ஒரு குப்பைக் கூடையை வண்டியில் கட்டி வைத்திருக்கிறார்கள். சாலையில்
குப்பையை இறைத்தால் அபராதத்தோடு வண்டிகளும் பிடுங்கிச் செல்லப்படும்.ஆட்டோவில் பயணம் செய்பவர் ஒருவர் சாலையில் காகிதத்தை வீசியதால் தூய்மைப் பணியாளர்
சுமார் ஒரு கிலோமீட்டர் ஆட்டோவின் பின் ஓடிச் சென்று அந்த பயணியைக் கூட்டி வந்து வீசிய
காகிதத்தைப் பொறுக்கிக் குப்பைத் தொட்டியில் போடும்படி அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தூர் செல்பவர்கள் படா கணபதியைப் பார்க்காமல் வரக்கூடாது என்று ஓர் ஐதீகம் உள்ளது. 25 அடி உயர பிள்ளையார் சிலை ஆசியாவிலேயே மிகப் பெரிய விநாயகர் சிலை என்று கூறப்படுகிறது. சிலை என்றால் கற்சிலை அல்ல, சுண்ணாம்பு, வெல்லம், செங்கல்,ஆகியவற்றைப் பொடி செய்து , 7 புண்ணியதலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணையும் வைரம், முத்து, மரகதம், கோமேதகம், மாணிக்கம் ஆகிய இரத்தினங்களின் பொடியையும் புண்ய நதிகளின் நீரையும் கலந்து வடிக்கப்பட்ட சிலை என்று சொல்லப்படுகிறது.
முழு முதற் கடவுளாம் கணபதியை வணங்கிவிட்டு எங்கள் பயணம் இடையூறு ஏதும் இல்லாமல்
சுமுகமாக நிறைவேறியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு நல்லபடியாக சென்னை திரும்பினோம்.
வாழ்க வளமுடன்
கருத்துகள்
கருத்துரையிடுக