பஞ்ச ஜோதி லிங்கம் பார்த்தால் பாவம் நீங்கும்

முதலும் முடிவும் அற்ற முழுமுதற் கடவுளாம், முக்தியளிக்கும் ஈசன் அழகான ஒளிப்பிழம்புகளாகத் தோன்றிய தலங்களே ஜோதிர்லிங்க ஸ்தலங்களாக அறியப்படுகின்றன.பக்தர்களுக்கு அருளும்பொருட்டு பரமன் இவ்வாறு எழுந்தருளிய பனிரெண்டு தலங்களைக் கீழ்க்கண்ட பாடல் வழியாக அறிந்து கொள்ளலாம்
சௌராஷ்ட்ரத்தில் சோமனாதர், ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனர், உஜ்ஜயினியில் மஹாகாலர், ஓம்காரத்தில் மாமலேஷ்வர்,பராலயத்தில் வைத்யனாதர், தாக்கினியில் பீமாசங்கர்,சேது பந்தத்தில் ராமேஷ்வரர், தாருகாவனத்தில் நாகேஷ்வரர், வாராணசியில் விஸ்வநாதர், கௌதமீதத்தில் த்ரம்யபகேஷ்வரர், ஹிமாலயத்தில் கேதாரநாதர், வேருலத்தில் க்ரிஷ்னேஷ்வரர்.
எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமானால்
குஜராத்தில் சோமநாதர்
ஆந்திரத்தின் ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனர்
மத்யப்ரதேசத்தில் இரண்டு, அதாவது உஜ்ஜயினியில் மஹாகாலர்
ஓங்காரேஸ்வரத்தில் ஓங்காரேஸ்வரர்
உத்தரப்ரதேசத்தின் வாராணசியில் விஸ்வநாதர்
உத்தராகண்டில் கேதாரநாதர்
தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் ராமநாதர்
மஹாராஷ்டிரத்தில் ஐந்து அதாவது பீமாசங்கர்
ஔந்தாவில் நாகநாதர்
பரலியில் வைத்யநாதர்
வேருலில் க்ரிஷ்னேஷ்வர்
நாசிக் அருகே த்ரயம்பகேஷ்வர்.
இந்த பன்னிரு லிங்கங்களை தரிசித்தாலும் தலவரலாறுகளைப் படித்தாலும் மனமுருகி நினைத்தாலும் போதும் ஏழு பிறவிகளில் இழைத்த பாவங்கள் மறைந்தோடி விடும் என்பது நம் ஆன்றோர் வாக்கு.
இந்தப் பதிவில் நாம் பார்க்கவிருப்பது மஹராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஐந்து ஜோதிர்லிங்கத் தலங்கள்.
முதலாவது பீமாசங்கர்.ஸஹயாத்ரி மலைத் தொடரில் கடல்மட்டத்திலிருந்து 3500 அடிஉயரத்தில் அமைந்துள்ள தலம் பீமாசங்கர். த்ரேதா யுகத்தில் சிவபெருமான் சுயம்புவாகத் தோன்றிய தலம் எனக் கருதப்படுகிறது.இத்தலம் குறித்து தனித்தனியாக ஒரு சில தலவரலாறுகள் உள்ளன.
த்ரேதா யுகத்தில் ராவணனின் சகோதரன் கும்பகர்ணனுக்கு பீமன் என்ற மகன் இருந்தானாம்.தந்தை இறந்த பிறகு பீமன் தனது தாயாருடன் இந்த இடத்தில் தங்கியிருந்தானாம். பிரம்மனை நோக்கி தவம் புரிந்து பல அரிய வரங்களைப் பெற்றதனால் செருக்குற்ற பீமன் தன்னை எதிர்த்தவர்களை வெட்டி சாய்த்து வந்தானாம். அப்பகுதியை ஆண்டு வந்த மன்னன் ஒரு சிறந்த சிவபக்தன். அவனைப் பிடித்துச் சிறையில் அடைத்த பீமன் தன்னை வணங்கும்படி வற்புறுத்தியபோது மன்னன் அதற்கு இணங்கவில்லை. சிறையில் இருந்தபோதும் ஒரு சிறிய சிவலிங்கத்தை அமைத்து தனது அன்றாட வழிபாடுகளைத் தவறாமல் செய்து வந்தான் மன்னன். இதை அறிந்த பீமன் சிறையில் நுழைந்து தனது வாளால் மன்னனை வெட்டிக் கொல்லத் துணியவே, பக்தனைக் காக்க பாய்ந்து வந்த பரமேஸ்வரன், தனது நெற்றிக் கண்ணைத் திறந்து பீமனை பஸ்மமாக்கிவிட்டார். மன்னனின் வேண்டுகோளை ஏற்று அங்கு கோயில் கொண்ட இடம்தான் பீமாஷங்கர் ஆனதாக ஒரு கதை கூறுகிறது.
பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமசேனர் இந்த இடத்திற்கு வந்து தங்கியிருந்த போது இக்கோயிலைக் கட்டியதாகவும் அதனால் தான் இந்த தலம் பீமாசங்கர் என்று அழைக்கப்படுவதாகவும் மற்றொருரு கதை உள்ளது.
தாரகாசுரன் என்ற அரக்கர் குல அரசனுக்கு தாரகாக்ஷன், வித்யுன்மாலி, கமலாக்ஷன் என்ற மூன்று புதல்வர்கள் இருந்தனர்.மூவரும் பிரம்மனை நோக்கி மூவாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தனர் அவர்களது கடுந்தவத்தை மெச்சி அவர்கள் முன்பு தோன்றிய நான்முகன், வேண்டும் வரத்தைக் கேட்கும்படி பணித்தார். அமரத்துவம் அளிக்கும்படி மூவரும் வேண்ட, அது இயலாத காரியம் என்றார் பிரம்மன். பின் மூவரும் சேர்ந்து, ஆண், பெண் அசுரர், தேவர், யக்ஷர், கின்னரர் மானுடர் என எவரும் தங்களைக் கொல்ல முடியாது என்ற வரத்தையும் மூவருக்கும் மூன்று வெவ்வேறு உலகங்களில் பொன் வெள்ளி மற்றும் எஃகாலான கோட்டைகள் அமைத்துத் தரவேண்டும் என்றும் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மூன்று கோட்டைகளும் ஒன்றாய் சேர்ந்து திரிபுரம் என்ற கோட்டையாக உருவெடுக்க வேண்டும் அப்போது அந்த கோட்டையை ஒரே அம்பில் பிளந்தால்தான் தங்களுக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தையும் வேண்டிப்பெற்றனர்.
சொர்க்கத்தில் அமைந்த பொன் கோட்டையில் தாரகாக்ஷனும், ஆகாயத்தில் அமைந்த வெள்ளிக் கோட்டையில் கமலாக்ஷனும் பூமியில் அமைந்த எஃகுக் கோட்டையில் வித்யுன்மாலியும் ஆட்சி புரியத் தொடங்கினர், ஆட்சி என்று சொல்வதைவிட அட்டகாசமென்று சொல்வதே பொருந்தும். துவண்ட தேவர்களும் யட்சர்களும் செய்வதறியாமல் பிரம்மனைச் சரணடைந்தனர். நான் கொடுத்த வரத்தை நானே செயலிழக்கச் செய்ய இயலாது என்று பிரம்மன் கூறிவிடவே அடுத்து ஆபத்பாந்தவன் அனாதரக்ஷகனான அலைகடல் துயிலும் பரந்தாமன் சரண் புகுந்தனர். காக்கும்தொழில் செய்யும் என்னைவிட அழிக்கும் தொழிலாற்றும் அம்பலவாணனே இதை நிறைவேற்றப் பொருத்தமானவர் என்று மாதவன் கூற அனைவரும் ஈசனை நாடிச் சென்றனர். திரிபுராசுரர்களை வதம் செய்ய ஒப்புக் கொண்டார் பரமன். ஆனால் அரக்கர்கள் பெற்றிருந்த வரத்தினால் அவர்களைக் கொல்வது அவ்வளவு எளிதல்ல. தேவலோக சிற்பி விஸ்வகர்மா பொன்னாலான தேரை அமைத்துத் தர சூரிய சந்திரர்கள் அதன் சக்கரங்களானார்கள்.நான்கு வேதங்கள் குதிரைகளாயின.பிரம்மன் தேரோட்டியாக அமர, சிவபெருமான் மேருவை வில்லாக வளைத்தார். வாசுகி நாணானது . திருமால் அம்பானார். அம்பு நுனியில் அக்னி பகவான் அமர்ந்து கொண்டார். இன்னும் ஒருபிரச்சினை உள்ளதே ! மூன்று அரக்கர்களும் தங்களை தேவரோ முனிவரோ யட்சரோ, மானுடரோ ஆணோ அல்லது பெண்ணோ கொல்ல முடியாது என்ற வரத்தை பெற்றிருந்தனரே. மாதொரு பாகனான் மஹேஸ்வரனுக்கு இது தெரியாமலா இருக்கும்!உமையம்மையை தனது உடலின் இடப்புறம் அமர்த்தி அர்த்த நாரீஸ்வர கோலத்தில் புறப்பட்டார். மூன்று கோட்டைகளும் ஒன்றாகி திரிபுரமாகும் தருணம் , சிவபெருமான் ஏவிய அம்பு அதைத் தகர்த்து எரித்து விட்டது. அப்போது ஈசனின் உடலில் இருந்து வடிந்த வியர்வை பீமா நதியாகப் பெருக்கெடுத்ததாகவும் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த இடத்திலேயே பெருமான் அர்த்தநாரீஸ்வர வடிவில்சுயம்பு லிங்கமாகக் கோயில் கொண்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. அதுதான் பீமாஷங்கர் ஜோதிர்லிங்கம் என்று அழைக்கப்படுகிறது.மூலவரின் மேற்பகுதியில் அர்த்தனாரீஸ்வரர் என்பதைக் குறிக்கும் விதமாக ஒரு பிளவு தென்படுகிறது
தமிழ் இலக்கியங்களின் படி பரமன் ஆயுதங்கள் ஏந்தவில்லை; மாறாக தனது ஒரு சிரிப்பினாலேயே திரிபுரத்தையும் எரித்ததாகக் கூறப்படுகிறது. " சிரித்துப் புரமெரித்த பெருமான்" என்ற பாடல் வரிகள் இதைப் புலப்படுத்துகின்றன.
தற்போதைய பீமாஷங்கர் ஆலயம் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்திய ஆரிய பாணி கலை வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலின் சுவர்களில் சிவபுராணம், ராமாயணம், கிருஷ்ணலீலை மற்றும் தசாவதார காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
திங்கட்கிழமைகளிலும் வார இறுதி நாட்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒரு நபருக்கு 500 ரூபாய் என்ற சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டு உள்ளது. ஆனால் வரிசையில் நிற்கும் பக்தர்களிடம் வந்து, தரிசனத்திற்கு மூன்று மணி நேரமாகும்; அதனால் சிறப்புதரிசன டிக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள் என்று போலி டிக்கெட்களைக் கொடுக்கும் தரகர்கள் அதிகம். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.500 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கிக் கொண்டு போனாலும் கருவறைக்குள் நுழையும் முன் பொது தரிசன வரிசையில் சேர்த்து விடுகிறார்கள்.கூட்ட நெரிசலில் முண்டியடித்துக் கொண்டு முன்னேறி ஒரு சில படிகளில் இறங்கிச் சென்றால் சிறிய லிங்க வடிவில் அருள் பாலிக்கிறார் பீமாசங்கர். நாமே தொட்டு அபிஷேகம் செய்யலாம்,மலர்கள் சாற்றலாம்.

இந்த ஆலயத்தில் சில விசேஷ அம்சங்கள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் சிவாலயங்களில் நவக்ரஹங்கள் கண்டிப்பாக இருக்கும். ஆனால் வட இந்தியாவில் அவை இருப்பதில்லை. ஆனால் பீமாசங்கர் ஆலயத்தில் சனி பகவானுக்கென்று தனி சன்னதி உள்ளது. அதில் மிகப்பெரிய மணி ஒன்று கட்டப்பட்டுள்ளது போர்த்துகீசிய நாட்டில் தயாரிக்கப்பட்ட அந்த மணி மராட்டியர் ஆட்சியின் போது இந்த ஆலயத்தில் கட்டப்பட்டது.
ஆலயத்தைத் தரிசித்த பின்னர் நடக்க முடிந்தவர்கள் மலையேறிச் சென்று குப்த பீமாசங்கரையும் தரிசித்துவிட்டு வரலாம். பெயருக்கு இணங்க சிறிய லிங்கம் அருவி நீர் விழும் இடத்தில் உள்ளது. நீர் வேகமாக வீழ்ந்தால் அந்த லிங்கம் நீருக்குள் மறைந்துவிடும். ஆனால் ஏறும் மலைப்பாதை கற்கள் நிறைந்ததாகக் காணப்படுகிறது.அதனால் மலையேறும் பழக்கம் உடையவர்கள் மட்டும் ஏறிச் செல்லமுடியும்.
அடுத்து நாம் செல்லவிருக்கும் தலம் ஔந்தா நாகனாதர் ஆலயம்.த்ரேதா யுகத்தில் இப்பகுதி தாருகாவனம் என்று அழைக்கப்பட்டு வந்தது. அங்கு தாருக் தாருகா என்ற இரு அசுரர்கள் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் சிவபக்தர்கள் .அதிலும் தாருகாவிற்கு அன்னை பார்வதி காட்சியளித்து வரம் வழங்கினாளாம். என்ன வரம் கிடத்தாலும் அசுரர்களுக்கே உரிய குணம் விட்டுப் போய்விடுமா?அப்பகுதியில் வசித்து வந்த துறவிகளைத் துன்புறுத்துவதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர் இந்த அரக்கர்கள். துறவிகளிடயே சுப்ரியா என்ற பெண்மணியும் இருந்தார். அசுரர் தொல்லை தாங்கமுடியாமல் மற்ற துறவிகளுடன் சேர்ந்து ருத்ரமந்திரத்தை சொல்லத் தொடங்கவே ஈசன் விரைந்தோடி வந்து அசுரர்களை அழித்து துறவிகளைக் காத்தருளியதாகவும் சுப்ரியாவின் வேண்டுகோளை ஏற்று அதே இடத்தில் ஜோதிர்லிங்கமாகக் கோயில் கொண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது.
இந்த ஆலயம் பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. சூதாட்டத்தில் தோற்று வனவாசத்திற்கு விரட்டப்பட்ட பாண்டவர்கள் மஹாராஷ்டிர மாநிலத்தின் ஹிங்கோலி என்ற பகுதியில் தங்கியிருந்தார்களாம். அப்போது சில பசுக்கள் அருகிலிருந்த நதியில் நீர் அருந்திவிட்டு நதியில் பாலை சுரக்கவிட்டுக் கொண்டிருந்தன. அக்காட்சியைப் பார்த்து ஆச்சரியப்பட்ட பாண்டவர்கள் நதிக்குள் ஏதோ ஒரு புனித வஸ்து இருக்க வேண்டும் என்று நினைத்து நதி நீரை இறைக்கத் தொடங்கினர்.இறைக்க இறைக்க நீர் சூடாகத் தொடங்கியது. பீமன் தனது கதையால் மூன்றுமுறை நீரை அடிக்க இரத்தம் பெருக்கெடுத்து அதன் பின்னர் ஒரு லிங்கம் வெளிவரத் தொடங்கியது. அந்த இடத்தில் யுதிஷ்டிரர் ஒரு கோயிலைஅமைத்ததாகவும் அதுவே நாகநாதர் ஆலயம் என்று பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 60 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள ஆலய வளாகத்தில் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் தனித்தனியாக சிறிய கோயில்கள் தவிர ரிண்மோசன் தீர்த்தகுளம், மாமியார் தீர்த்த குளம், மருமகள் தீர்த்த குளம் ஆகியவையும் காணப்படுகின்றன. இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னெவென்றால் மாமியார் குளத்தின் நீர் உவர்ப்பாகவும் மருமகள் குளத்தின் நீர் இனிப்பாகவும் உள்ளன.
ஆலய வளாகத்தின் மத்தியில் 7200 சதுர அடி பரப்பில் 8 தூண்களுடன் நீள்வட்ட வடிவத்தில் அமைந்துள்ளது நாகேஸ்வரர் ஆலயம். பாதாள அறையில் பரமன் லிங்க வடிவில் தெற்கு திசை நோக்கி அமர்ந்திருக்கிறார். பக்தர்கள் அவரைப் பார்ப்பதற்கு இரண்டு பெரிய படிகளில் குனிந்தவாறே இறங்கிச் செல்ல வேண்டும்.கீழே இருக்கும் அறை சுமார் நான்கு அடி உயரம்தான் இருக்கும்.நிற்க முடியாது குனிந்தபடி நுழைந்தவுடன் நடு மத்தியில் இருக்கும் ஆண்டவரைச் சுற்றிப் போடப்பட்ட பலகைகளில் அமர்ந்து கொண்டு அபிஷேகம் செய்யலாம், வில்வ இலைகள் மற்றும் மலர்கள் சாற்றலாம். வணங்கலாம். பின் குனிந்தவாறே படிகளில் ஏறி தொங்க விடப்பட்டிருக்கும் கயிற்றைப் பிடித்துக் கொண்டு ஏறி வெளியே வரவேண்டும்.ஓரு சமயத்தில் நான்கு பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள்.ஆனால் அந்த அறைக்குள் நுழைந்தவுடன் தெய்வ ஸான்னித்யத்தை உணர முடிகிறது. அதுவும் தீபாராதனை காட்டும்போது ஐயன் சென்னிறத்தில் ஜொலிப்பது கண்கொள்ளா காட்சி.
இந்த ஆலயம் ஹிந்து மதத் துறவிகளான ஞானேஷ்வர்,விஸோபா நாம்தேவ் ஆகியோர் வாழ்க்கைகளுடன் அதீத பிணைப்பு கொண்டுள்ளது. ஆன்மீக வாழ்க்கைக்கு வழிகாட்ட ஒரு குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்த நாம்தேவை ஔந்தா செலும்படி பணித்தாராம் குரு ஞானேஷ்வர். நாகனாதர் ஆலயத்திற்குச் சென்ற நாம்தேவ் ஒரு மனிதர் லிங்கத்தின் மீது காலை வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். கடவுளை அவமரியாதை செய்யும் நீங்கள் எல்லாம் ஒரு மனிதரா? காலை உடனே அகற்றுங்கள் என்று அந்த மனிதரைக் கடிந்து கொண்டார் நாம்தேவ். அவர் பதிலேதும் பேசவில்லை தனது காலை அகற்றி வேறு ஓரிடத்தில் வைக்க அங்கு ஒரு சிவலிங்கம் தோன்றியது.அவர் காலை வைக்கும் இடங்களிலெல்லாம் சிவலிங்கங்கள் தோன்ற இவரே நாம் தேடி வந்த குரு என்பது நாம்தேவிற்குப் புரிந்து விட்டது. எங்கும் நிறைந்ததே பரம்பொருள் என்ற தத்துவத்தை உணர்த்திய அந்த மாமனிதர் விஸோபாவை அந்த க்ஷணமே தனது குருவாக ஏறுக்கொண்டார் நாம்தேவ்.
ஒருமுறை நாம்தேவ், தனது குருக்களான ஞானேஷ்வர் விஸோபா ஆகியோருடன் கோயிலின் முன் அமர்ந்து பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். அப்போது கோயில் அர்ச்சகர், இவர்கள் பாடுவது பூஜைக்கு இடைஞ்சலாக இருப்பதால் வேறு பக்கம் போய் பாடும்படி கட்டளையிட்டாராம். அதை ஏற்று நாம்தேவும் மற்றவர்களும் கோயிலின் பின்புறத்தில் அமர்ந்து பஜனைப் பாடல்களை இசைக்கத் தொடங்கினர். என்ன ஓர் அதிசயம்! கோயில் முழுவதுமே அரைவட்டம் சுழன்று, கருவறை நாம்தேவ் பார்க்கக்கூடிய இடத்திற்கு வந்து விட்டது. அர்ச்சகர் செய்த தவறுக்கு வருந்தி நாம்தேவிடம் மன்னிப்பு கேட்டாராம்.இன்றளவும் நந்தி கோயிலின் பின்புறத்தில் உள்ளதே இதற்கு சாட்சி.
மஹாராஷ்ட் ராவின் ஜோதிர்லிங்கங்களின் வரிசையில் நாம் அடுத்து பார்க்கவிருப்பது பரலி வாஜிநாத் அல்லது வைத்யநாத் கோயில். தமிழ்நாட்டின் வைத்தீஸ்வரன் கோயில் போன்றே நோய்நொடி இல்லாமல் வாழ வரம்வேண்டி பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகின்றனர். இந்த ஆலயம் தொடர்பாக இரண்டு தல வரலாறுகள் உள்ளன. வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி வானவரும் தானவரும் ஆழியைக் கடைந்த போது அலைமகளுடன் வெளிவந்த அமுதம் அரக்கர் கையில் சிக்காமல் இருப்பதற்காக அதை எடுத்துக் கொண்டோடிய அச்சுதன் அமிர்த கலசத்தை பரலி ஆலய லிங்கத்திற்குள் மறைத்து வைத்ததாகவும் துரத்தி வந்த தானவர்கள் லிங்கத்தைப் பிளக்க முற்பட்டதாகவும் ஆனால் அதிலிருந்து வெளிப்பட்ட ஒளிப்பிழம்பைக் கண்டு அவர்கள் பயந்தோடி விட்டதாகவும் ஒரு கதை கூறுகிறது. தேவர்களுக்கு அமிர்தம் வெற்றிகரமாக கிடக்கப்பெற்றதனால் இந்த இடம் வைஜயந்தி என்று அழைக்கப் பட்டதாகவும் ஆண்டவர் வாஜிநாதர் என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
மற்றொரு கதை இலங்கை மன்னன் ராவணன் குறித்தது. ஆத்மலிங்கம் வேண்டி ராவணன் தன் தலைகளை ஒவ்வொன்றாக வெட்டி தீயிலிட்டு தம் புரிந்தானாம். மனமகிழ்ந்த மஹேசன் ஆத்மலிங்கத்தை ராவணனிடம் கொடுத்து இதைத் தரையில் எங்கும் வைக்காமல் இலங்கைக்கு எடுத்துச் செல்லும் படி பணித்தாராம். ராவணன் ஆத்மலிங்கத்தை இலங்கைக்கு எடுத்துச் சென்றுவிட்டால் அவனது பலம் கூடிவிடும் ;அவன் அக்ரமங்களும்பெருகிவிடும் என்று அஞ்சிய தேவர்கள் திருமாலிடம் தஞ்சம் புகுந்தனர். ஆபத்பாந்தவன் அடைக்கலம் நாடி வந்தவர்களைக் கை விட்டு விடுவாரா? விநாயகரை அழைத்து ஒரு சிறுவன் போல் வேடமிட்டு ராவணனைத் தொடர்ந்து செல்லும்படியும் அவன் தனது கையில் வைத்திருக்கும் லிங்கத்தை கீழே வைக்க முடியாது என்பதால் விநாயகரிடம் அந்த லிங்கத்தை கொடுப்பான் என்றும் அவர் அதை கீழே வைத்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று செல்லவேண்டும் என்றும் விவரித்தார். பிள்ளயாரும் அதற்கு ஒப்புக் கொண்டு இலங்கைவேந்தனை பின்தொடர்ந்து சென்றார். மாயக் கண்ணன் தனது சக்ராயுதத்தால் சூரியனை மறைக்க, மாலை வந்துவிட்டதாக நினைத்த ராவணன் சூரிய வணக்கம் செய்வதற்காக தனது புஷ்பக விமானத்திலிருந்து இறங்கினான். காத்திருக்கும் பாலகன் கணபதியைப் பார்த்து "சிறுவனே,நான் சூரிய வணக்கம் செய்துவிட்டு வரும்வரை இந்த லிங்கத்தை கையில் வைத்துக் கொள், எந்த காரணம் கொண்டும் கீழே வைத்து விடாதே என்றானாம்.கீழே வைக்கத்தானே வந்திருக்கிறார் ஐந்துகரத்தவன்! அது சரி, ஆனால் நான் மூன்று முறை உனது பெயரைச் சொல்லி அழைப்பேன் அதன் பிறகும் நீ வரவில்லை என்றால் இந்த லிங்கத்தை வைத்துவிட்டு நான் போய்க்கொண்டே இருப்பேன் என்றாராம். தனது வழிபாட்டை முடித்துக் கொண்டு வந்த ராவணன் ஆத்மலிங்கம் பூமியில் இருப்பதைப் பார்த்து திகைத்துப் போனான். அந்த சமயம் மாயவன் தனது சக்ராயுதத்தை விலக்கிக் கொள்ள சூரியன் முழு பிரகாசத்துடன் வெளிவந்ததைப் பார்த்த ராவணனுக்கு கோபம் தலைக்கேறியது. லிங்கத்தைப் பூமியிலிருந்து பிடுங்கப்பார்த்தான் ஆனால் இயலவில்லை வேதனையுடன் இலங்கை திரும்பினான் ராவணன். அந்த இடம் தான் இன்றைய பர்லி என்றும் ராவணன் கொண்டு வந்த ஆத்மலிங்கம் தான வாஜிநாதராக அங்கு கோயில் கொண்டிருக்கிறார் என்றும் ஒரு கதை கூறுகிறது.
இந்த ஆலயம் மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. நான் பார்த்தவரை ஜோதிர்லிங்கக் கோயில்களிலேயே கூட்ட நெரிசல் அவ்வளவாக இல்லாத கோயில் இது.வரிசையில் மணிக்கணக்காக நிற்காமல் நேராகச் சென்று ஈசனை தரிசனம் செய்ய முடிந்ததே பெரும் பாக்கியம். ஐயனின் சிரசில் சூடிய வில்வ இலைகள உட்கொண்டால் தீராப் பிணியும் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையும் அங்குள்ளது.
மஹாராஷ்ட்ராவில் உள்ள ஐந்து ஜோதிர்லிங்கங்களில் நாம் அடுத்து பார்க்கவிருப்பது க்ருஷ்னேஷ்வர்.சம்பாஜிநகர் மாவட்டம் வெருல் என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த புராதனமானகோயில் சுமார் 44 ஆயிரம் சதுர அடிபரப்பில் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது .பிரசித்தி பெற்ற உலக மரபுச் சின்னங்களில் ஒன்றான எல்லோரா குகைகள் இந்த கோயிலில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. இந்த் கோயில் பற்றிய குறிப்புக்கள் சிவபுராணம், ஸ்கந்த புராணம், ராமாயணம், மஹாபாரதம் ஆகிய நூல்களில் காணப்படுகின்றன. க்ருஷ்னேஷ்வர் என்றால் கருணைக் கடவுள் என்று பொருள். தல வரலாறும் அதையே பிரதிபலிக்கிறது.தேவகிரி மலைப் பகுதியில் சுதர்மா என்ற அந்தணர் சுதேஹா என்ற தனது மனைவியுடன் வசித்து வந்தார்.தனது ஜாதகப்படி தாயாகும் பாக்கியம் இல்லை என்று சுதேஹாவிற்குத் தெரிய வந்தவுடன் தனது இளைய சகோதரி க்ருஷ்மாவை மணம் புரியும்படி சுதர்மாவை வற்புறுத்தத் தொடங்கினாள். அவரும் வேறு வழியின்றி அதற்கு ஒப்புக் கொண்டு க்ருஷ்மாவை மணம் புரிந்து கொண்டார். தலை சிறந்த சிவ பக்தையான க்ருஷ்மா நாள்தோறும் மண்ணால் 108 சிவலிங்கங்களை அமைத்து அவற்றுக்கு பூஜை செய்துவிட்டு அவற்றைக் கோயில் குளத்தில் கரைத்துவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஐயனின் அருளால் க்ருஷ்மாவிற்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது. சுதேஹாவின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.அன்போடும் பாசத்தோடும் அந்த குழந்தையை வளர்த்து வந்தார். குழந்தை வளர்ந்து வாலிபனாகி திருமணமும் புரிந்து கொண்டான். அவன் வளர வளர சுதேஹாவின் மனதில் த்வேஷமும் கூடவே வளரத் தொடங்கியது. சகோதரியின் மேல் பொறாமையும் வெறுப்பும் விஷம் போல் வேரூன்றத் தொடங்கின. ஒரு நாள் இரவில் தான் தூக்கி வளர்த்த பையனை கொலை செய்யவும் துணிந்த சுதேஹா அவனைக் கொன்று உடலைக் கோயில் குளத்தில் வீசி எறிந்தாள். காலை விஷயம் தெரிய வந்தவுடன் க்ருஷ்மாவும் அவளது மருமகளும் துயரத்தில் ஆழ்ந்தனர். ஆனால் க்ருஷ்மா தனது அன்றாட சிவ வழிபாட்டைக் கைவிடாமல் அன்றும் 108 மண்ணாலான சிவலிங்கங்களை உருவாக்கி வழிபாடு செய்து அவற்றைக் கோயில் குளத்தில் கரைத்து விட்டு படியேறியபோது பின்னால் காலடி சத்தம் கேட்டுத் திரும்பினாள். அவளால் தனது கண்களையே நம்ப முடியவில்லை. கொலையுண்ட மகன்உயிர் பெற்று தனது கால்களைப் பற்றி வணங்குவதைக் கண்டாள்; களிப்பில் ஆழ்ந்தாள். ஈசனின் கருணையைப் போற்றினாள். அப்போது காட்சியளித்த பரமன் வேண்டும் வரத்தைக் கேட்கும்படி கூறவே க்ருஷ்மா கேட்டது என்ன தெரியமா?தெரியாமல் தவறு செய்த தனது சகோதரியை மன்னித்து அருள வேண்டும் என்றும் தனக்குக் காட்சி அளித்த இடத்திலேயே கோயில் கொள்ள வேண்டும் என்றும் இரண்டு வரங்களைக் கேட்டுப் பெற்றாள். பக்தையின் பரந்த மனதைப் பெரிதும் பாராட்டிய பரமன் அவள் விருப்பப்படி அந்த இடத்திலேயே க்ருஷ்னேஷ்வர ஜோதிர்லிங்கமாக கோயில் கொண்டதாக தல வரலாறு கூறுகிறது.
இந்த கோயில் புராதனமான தென்னிந்திய கட்டிடக் கலைவடிவத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.செந்நிற எரிமலைக் கற்களால் 5 அடுக்குகளாகக் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயிலின் கோபுரத்தின் மேல் ஒரு பொன்னிற கலசம் பொருத்தப்பட்டுள்ளது. மற்றபடி கருவறை அர்த்த மணடபம் தவிர 24 தூண்கள் கொண்ட சபா மணடபம் கோயிலின் அழகுக்கு மெருகூட்டுவதாக அமைந்துள்ளது.
மஹாராஷ்ட்ராவின் பஞ்ச ஜோதிர்லிங்கங்களின் வரிசையில் முத்தாய்ப்பாக நாங்கள் சென்ற இடம் த்ரயம்பகேஷ்வர். இந்த கோயில் பிரம்ம கிரி நீல கிரி மற்றும் கலகிரி ஆகிய மூன்று மலைகளுக்கிடையே அமைந்துள்ளது. த்ரயம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கத்தைக் காணும்போது ஆவுடையார் மட்டுமே கணகளுக்கு தென்படுகிறது. உற்று நோக்கினால்தான் ஆவுடையாருக்கு மத்தியில் லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில் உரல் போன்று ஒரு பள்ளம் தெரிகிறது.அதில் மும்மூர்த்திகளைக் குறிக்கும் வகையில் மூன்று சிறு லிங்கங்கள் பிரம்மா, விஷ்ணு ருத்திரன் ஆகிய மூன்று கடவுளர்களின் முகங்களைக் கொண்டிருப்பது, ஒரு தனித்துவம் வாய்ந்த அமைப்பாகக் கருதப்படுகிறது. நாள்தோறும் இந்த பள்ளத்தின் மேல் ஒரு முகம் கொண்ட வெள்ளி கவசமோ அல்லது மூன்று முகங்கள் கொண்ட வெள்ளி கவசமோ சாற்றப்படுகிறது. திங்கட்கிழமைகளில் மாலை நேரம் லிங்கத்திற்கு தங்கக்கிரீடம் அணிவிக்கப்படுகிறது பாண்டவர் காலத்தது என்று கருதப்படும் இந்த கிரீடத்தில் வைர வைடூரியங்கள் மரகதக்கற்கள் போன்ற விலைமதிப்பற்ற கற்கள் உள்ளன.

ஜோதிர்லிங்கத்தைத் தவிர கங்காதேவி, ஜாலேஸ்வரர், ராமேஸ்வரர், கேதார நாதர்,ராமர், கிருஷ்ணர், பரசுராமர் ஆகிய தெய்வ உருவங்களும் காணப்படுகின்றன.
தலவரலாறு என்ன கூறுகிறது என்று பார்ப்போம். த்ரயம்பக மலைப் பகுதியில் கௌதம முனிவர் தனது மனைவி அஹல்யாவுடன் ஆஸ்ரமத்தில் வசித்து வந்தார். அப்போது அந்த பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டது.கௌதமர் மழைக் கடவுள் வருணனை பிரார்த்தனை செய்தபோது அவரது பக்தியை மெச்சி அப்பகுதியில் மழை பொழியும் படி செய்தாராம் வருணன். ஆஸ்ரமத்தைச் சுற்றிலும் பச்சைப் பசேலென்று நெற்பயிர்கள் வளர்ந்து அறுவடையும் ஆனது. கௌதமர், அருகில் வசித்து வந்த மற்ற முனிவர்களுக்கும் விளைபொருட்களை பகிர்ந்து அளித்தார். வறட்சியில் வாடியவர்களுக்கு உணவு கிடைக்கிறதே என்று மகிழ்ச்சி அடையாமல் கௌதமருக்கு மட்டும் எல்லாம் கிடைக்கிறதே என்று பொறாமை கொண்டனர் அந்த முனிவர்கள். அவரை எப்படியாவது அவமானப் படுத்த வேண்டும் என்று திட்டம் தீட்டிய அவர்கள், தங்கள் தவவலிமையால் ஒரு பசுவை உருவாக்கி கௌதமரின் வயலுக்குள் அனுப்பினர். கௌதமர் நெற்பயிர்களை மேயத்தொடங்கிய பசுவை விரட்ட முற்படவே, அது கீழே விழுந்து உயிர்நீத்தது. பதைத்துப் போன கௌதமர் திகைத்து நிற்கவே, கூடிய முனிவர்கள் கொடிய பாவச்செயலை இழைத்ததனால் கௌதமர் முனிவராக இருக்கவே அருகதை இல்லாதவர் என்றும், கங்கை நதியில் நீராடினால்தான் இந்த பாவத்தைப் போக்க முடியும் என்றும் அச்சுறுத்தினார். மனம் வருந்திய கௌதமர் அதே இடத்தில் அமர்ந்து சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரியத் தொடங்கினார். முனிவர்பால் மனம் இரங்கிய மகேசன் அவர் முன் தோன்றி, தனது தலையில் இருந்த கங்கையை இறங்கிச் சென்று முனிவருக்கு பாவ விமோசனம் அளிக்கும் படி பணித்தாராம். ஆனால் பரமேஸ்வரனைப் பிரிய மனம் இல்லாத கங்கை தாங்களும் இங்கு கோயில் கொள்வதாக இருந்தால் நான் கௌதமருக்கு பாபவிமோசனம் அளித்து கோதாவரி என்ற பெயரில் இந்த பூமியை உய்விக்க பெருகுவேன் என்றாளாம். மனமகிழ்ச்சி அடைந்த மகேசன் அந்தத் தலத்தில் த்ரயம்பகேஷ்வர் என்ற ஜோதிர்லிங்கமாகக் கோயில் கொண்டாராம்.
வேறு எந்த ஆலயத்திலும் இல்லாதபடி இந்த ஆலயத்தில் நாராயண நாகபலி பூஜை நடத்திக் கொடுக்கப்படுகிறது. முன்னோர் சாபம் பித்ரு தோஷம் போன்ற பிரச்சினைகள் உள்ள குடும்பத்தினர் இங்குவந்து பிரத்தியேகமாக நாராயண நாகபலி பூஜை செய்கின்றனர். இதன் ஒரு பகுதியாக தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளுக்காக நாக தேவதையிடம் மன்னிப்பு நாடும் சடங்கு ஒன்றும் உள்ளது. இது தவிர ஜாதகத்தில் ராகு கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் போன்றவை இருக்கும் பட்சத்தில் கால சர்ப்பதோஷ நிவர்த்தி பூஜைக்கும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. பசுவதை என்ற கொடிய பாவத்திலிருந்து கௌதம மஹரிஷிக்கு நிவர்த்தி அளித்த தலமாகையால் மானுடர்கள் இழைக்கும் பாவங்களுக்கும் அவர்களது தோஷங்களுக்கு பரிஹாரத் தலமாகவும் இது விளங்குகிறது
ராமாயண காவியத்திலும் இந்த தலம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. தந்தை தசரதன் சொல்லைத் தட்டாமல் தம்பியோடும் தாரத்தோடும்14 வருட வனவாசம் புகுந்த தசரத ராமன் சித்ரகூடத்திலிருந்து இடம் பெயர்ந்து பஞ்சவடியில் வசித்து வந்தபோது த்ரயம்பகேஷ்வர் ஆலயத்திற்கு வந்து தந்தையின் நினைவு தினத்தன்று ஆற்றவேண்டிய சடங்குகளைச் செய்ததாக சொல்லப்படுகிறது. ஐயன்பால் மையல் கொண்ட ராவணன் தங்கை சூர்ப்பனகையின் மூக்கை லக்ஷ்மணன் அரிந்த இடம்தான இன்று நாசிக் நகரம் என்று அறியப்படுகிறது.கோதவரி நதிக்கரையில் அமைந்த பஞ்சவடி பகுதியில் ராவணனால் கவர்ந்து செல்லப்படும் முன்பு சீதா பிராட்டி வசித்த குகை காணப்படுகிறது.இது தவிர வெள்ளை ராமர் கறுப்பு ராமர் என்று இரண்டு ராமர் ஆலயங்கள் உள்ளன.கறுப்பு ராமர் ஆலயத்தில் சீதையுடனும் லக்ஷ்மணருடனும் எழுந்தருளியுள்ள ராமர் பொன்வண்ண மீசையுடன் காட்சி அளிக்கிறார்.
த்ரயம்பகேஷ்வரர் கோயில், பஞ்சவடி ஆகிய இரண்டு தலங்களையும் முழுமையாகப் பார்ப்பதற்கு ஒரு நாள் போதாது. அதற்கு தகுந்தாற் போல் திட்டமிட்டுக் கொண்டு நாம் செல்வது நல்லது.
விநாயகர் அருளாலும் ஈசன் அருளாலும் மஹாராஷ்ட் ர மாநிலத்தில் உள்ள ஐந்து ஜோதிர்லிங்கங்களையும் தரிசனம் செய்த மனநிறைவோடு திரும்பினோம்.
ஓம் நமச்சிவாய
கருத்துகள்
கருத்துரையிடுக