Sri Lalitha Maha Thiripurasundari Ambal Devasthanam Kilampakkam
Sri Lalitha Maha Thiripurasundari Ambal Devasthanam
அழைப்பு விடுத்த அம்பாள்
![]() |
சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி சிவகங்கை குளத்தருகே சிரித்திருக்கும் ஸ்ரீ மீனாக்ஷியவள்.
மூககவியின் வாய்முகமாக முத்தான பஞ்சசதியை முழங்க வைத்த கருணைக் கடலாம் காமாக்ஷியவள்.
அபிராம பட்டரின் அருட்கூற்றை மெய்ப்பிக்க ஆகாயத்தில் தனது தாடங்கத்தை வீசி முழு நிலவைக் காட்டிய அன்னை அபிராமியவள்.
அந்த அம்பாள் எங்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதத்தைப் பற்றிய பதிவு இது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் இரவில் .அம்பாள் என் கணவரின் கனவில் தோன்றி தன்னைக்காணவருமாறு அழைப்பு விடுத்ததுதான் இந்த பதிவுக்கான காரணம். தொலைகாட்சி மெகா தொடர்களைப் போல, அலுக்காமல் மூன்று முறை கனவில் தோன்றி விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து “என்னைக் காண வர மாட்டாயா என்று கேட்கவே அதிர்ந்து போன என் கணவர் “வா வா என்கிறாயே, எங்கு வர வேண்டும் என்று சொல்ல வில்லையே என்றாராம். எல்லாம் தூக்கத்தில்தான். நான் காக்களூர் தொழிற்பேட்டைக்கு அருகில்தான் இருக்கிறேன் தேடிக்கொண்டு வா என்று அழைப்பு விடுத்துவிட்டு மறைந்து விட்டாளாம். ஆனால் ஒரு கையில் கரும்புத் தோகை, மற்றொரு கையில் பஞ்சபுஷ்பத்தோடு அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளித்த அம்பாளை அவர் மனத்தில் பதித்துக் கொள்ள மறக்கவில்லை.
அடுத்த நாள் காலை எழுந்ததுமே எப்போதுமே கை கொடுக்க ஆயத்தமாக இருக்கும் கூகிள் ஆண்டவர் துணையோடு காக்களூர் தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ள தேவி ஆலயங்களைத் தேட ஆரம்பித்தோம்.கிளாம்பாக்கம் என்ற கிராமத்தில் லலிதா திரிபுரசுந்தரி ஆலயம் ஒன்று இருப்பதை கூகிள் வரைபடம் காட்டியது. அடுத்த நாள் காலை புறப்பட்டுவிட்டோம் அம்பாளைத் தேடிக் கண்டுபிடிக்க.
வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கி அங்குள்ள ஆட்டோ ஓட்டுனரைக் கேட்டோம். கிளாம்பாக்கம் போய் கோயிலைப் பற்றி விசாரிக்கலாம் என்று எங்களை அழைத்துச் சென்றார். ஊருக்குள் நுழைந்தபிறகு நாங்கள் விசாரித்த ஒருவருக்கும் கோயிலைப் பற்றித் தெரியவில்லை. ஒரு பெண்மணி மட்டும் ஊருக்கு வெளியில் அகஸ்தீஸ்வரர் கோயிலுக்குப் பின்னால் ஒரு நாகாத்தம்மன் கோயில் உள்ளது. அங்கு போய் விசாரித்துப் பாருங்கள் என்றார். அந்த சிவன் கோயிலைத் தேடிக்கொண்டு போனோம். மதியம் 12 மணி இருக்கும். சிவன் கோயில் மூடிக் கிடந்தது. ஆனால் பக்கத்தில் திறந்திருந்த நவக்ரஹ சன்னதியில் ஒரு பெண் வலம் வந்து கொண்டிருந்தாள் . அந்த பெண்ணின் அருகில் போய் லலிதாம்பாள் கோயில் எங்கிருக்கிறது தெரியமா என்று கேட்டோம். அதற்கு அந்த பெண் எனக்கு சரியாகத் தெரியவில்லை, என் அப்பாவுக்குத் தான் தெரியும் , நான் வீட்டிற்குப் போய் அவரிடம் கேட்டு விட்டு உங்களிடம் வந்து சொல்கிறேன், ஆனால் பின்னால் உள்ள கோயில் அருகே ஒருவர் நின்று கொண்டிருக்கிறாரே அவரையும் கேட்டுப் பாருங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.சிவன் கோயிலுக்குப் பின்புறம் ஒரு வறண்ட குளமும் அதன் கரையில் ஒரு சிறிய ஆலயமும் காணப்பட்டது. ஒருவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டு செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் கேட்டபோது இந்த சின்ன கோயில் அம்மன் கோயில்தான் ஆனால் என்ன பெயர் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. இந்தவீதியிலேயே ஒரு மஞ்சள் கலர் வீடு இருக்கும் . அவர்கள்தான் இந்த கோயிலைப் பார்த்துக் கொள்பவர்கள் என்றார். அதே ஆட்டோவிலேயே மஞ்சள் நிற வீட்டைத் தேடிக்கொண்டு சென்றோம்.
கதவைத் திறந்த பெண்மணியைப் பார்த்தவுடனேயே அம்பாள் அனுக்ரஹம் பெற்றவர் போன்று தோன்றியது. நாகம்மாள் என்ற அந்த பெண்மணி அம்மன் கோயிலைப் பற்றி கேட்க ஆரம்பித்தவுடனேயே லலிதாம்மா கோயிலைப் பார்க்க வந்திருக்கிறீங்களா, வாங்க கோயிலைத் திறந்து காட்டறேன் என்று எங்களுடன் வந்தார். ஓரடி நீளம் கொண்ட பெரிய சாவியைப் போட்டு கதவைத் திறந்த உடனேயே தீபஒளியில் தெரிந்தது தேவியின் முகம். அதைப் பார்த்தவுடனேயே என் கணவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் கசியத் தொடங்கியது. கனவில் வந்த அதே அம்பாள்.ஒரு கையில் கரும்புத் தோகை,அடுத்த கையில் பஞ்சபுஷ்பம்,ஒரு கால் மடித்து ஒருகால் தொங்கவிட்டு அமர்ந்த திருக்கோலம்.தன்னை அழைத்து வந்து விட்டாள் என்ற ஆனந்தம், கண்டுபிடித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி, எல்லோரையும் விட்டு என்னை ஏன் அழைத்தாள் என்ற திகைப்பு –இப்படி அனேக உணர்ச்சிகள் அவர் முகத்தில் பிரதிபலித்தன
![]() |
![]() |
இதனிடையே லலிதா திரிபுர சுந்தரிக்கு கிளாம்பாக்கம் போக வேண்டும் என்ற ஆசை வந்தது போலும். அம்பாளின் லீலையை யாரால் புரிந்து கொள்ள முடியும்! காட்சியளித்தாள் கார்த்திக்கின் கனவில்; ஆணையிட்டாள் அவர்களது கிராமத்திற்கு அழைத்துச் செல்லும்படி. கார்த்திக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. சிவன் கோயில் அர்ச்சகரின் அறிவுரையின் படி காஞ்சிபுரம் சங்கரமடம் சென்று நடந்ததை விவரிக்கவே அவர்களுடைய ஆலோசனை பேரில் மஹாபலிபுரம் சென்று ஸ்தபதியைச் சந்தித்து தன் கனவில் கண்டவாறு அம்பாள் சிலையை வடித்துத் தரும்படி கோரிக்கை வைக்கப்பட்டது .திருமீயச்சூர் லலிதாம்பிகை போன்று காலில் கொலுசு மாட்ட துளை உள்ள வகையில் வடிவமைக்கப்பட்ட அம்பாள் சிலையும் வந்தது. பிரதிஷ்டை செய்யும்போது வைக்கவேண்டிய செப்புத் தகடும் சங்கர மடத்திலிருந்து கிடைத்தது. பின் என்ன அம்பாள் ஆனந்தமாக கிளாம்பாக்கத்தில். குடியேறினாள். முன்பிருந்த நாகாத்தம்மன் அருகில் அமைக்கப்பட்ட தகரக் கொட்டைகைக்கு மாற்றப்பட்டாள்.
![]() |
அடுத்து அம்பாள் நிகழ்த்திய அற்புதம் ஆழ்துளை கிணறு அமைக்க வந்தவர் கனவில் தோன்றியது. இரண்டு நாட்களாக துளையிட்டும் நீர் வந்த பாடில்லை என்பதால் அவர் அடுத்த நாள் காலை வேறொரு இடத்தில் தோண்டிப் பார்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டு உறங்கப் போனார். தனது பக்தர்களுக்கு பொருள் நஷ்டம் ஏற்பட விடுவாளா அந்த கருணாமயி. அவரது கனவில் தோன்றி அடுத்த நாள் அதே இடத்தில் மேலும் 10 அடி தோண்டப் பணித்தாள். அம்பாள் ஆணையை ஏற்று அவர் அதே இடத்தில் தோண்ட எண்ணி பத்தாவது அடியில் தண்ணீர் வந்தது.
தண்ணீருக்கு வழி பிறந்து விட்டது. அடுத்து கார்த்திக் கூறியதற்கு இணங்க கருவறை சுவர்களுக்கு கருங்கல் பதிக்கும் பணிக்கு ஏற்பாடு செய்யலாம் என்று நாங்கள் நினைத்தோம். இல்லை, இல்லை நாங்கள் நினைக்கவில்லை ,அவள் எங்களை நினைக்க வைத்தாள். அதே நேரம் இந்த கோயிலுக்கு முன்புறம் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகத்தீஸ்வரர் ஆலயத்துக்கு மதிற்சுவர் கட்டும் பணிக்கு உதவ முன்வந்தது காஞ்சி சங்கர மடம். அதை மேற்பார்வையிட வந்த மடத்து பிரதிநிதிகள் லலிதா திரிபுரசுந்தரியை வணங்க வந்தனர்.
![]() |
பெரியவர்கள் வாக்கு பரமேஸ்வரன் வாக்கு என்பார்கள் அல்லவா? அதனால் கார்த்திக் நாகரை அகற்றி விடலாம் என்று முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து முடித்த நேரம், கருங்கல் பதிக்கும் பணியும் முடிவடைந்தது. கும்பாபிஷேகம் நடத்தலாம் என்று ஊர் பெரியவர்கள் முடிவு செய்தனர். சித்ரா பௌர்ணமியன்று நாள் குறிக்கப்பட்டது.கிளாம்பாக்கம் மக்கள் எத்தனை பக்தியுடனும் சிரத்தையுடனும் கோயில் விழாவில் கலந்து கொண்டு கைங்கர்யம் செய்ய முன்வருகிறார்கள் என்பதை அன்றுதான் எங்களால் காண முடிந்தது. அந்த ஊரைச் சேர்ந்த ஒரு முதிய பெண்மணி கண்களில் நீர் மல்க என்னிடம் கூறினார்” கஷ்டம் ஏதாச்சும் வந்து அம்மா கிட்டே முறையிட்டா அம்மா கண்ணைத் திறந்து எங்க கிட்டே பேசுவாங்க, வழி காட்டுவாங்க”என்றார். உண்மைதான்,குழந்தைகள் அல்லல் படும்போது அன்னைதானே ஆதரவு கரம் நீட்டுகிறாள்.
இந்த ஆலயத்தில் திருமீயச்சூர் போல சித்ரா பௌர்ணமி மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. விழா காலங்களில் எளிய கிராம வாசிகள் பணமாக இல்லையென்றாலும் அரிசி, பருப்பு ,தேங்காய் எண்ணெய் போன்று தங்கள் நிலத்திலிருந்து கிடைக்கும் பொருட்களை அம்மனுக்கு காணிக்கையாக அளிக்கின்றனர் ஒரு மகளிர் குழு பெரிய பெரிய பித்தளை தாம்பாளங்கள், விளக்குகள் இவற்றை புளி போட்டு பளபளவென்று தேய்த்து தயார் செய்கிறார்கள். மற்றொரு குழுவினர் அம்பாளுடைய வஸ்திரங்களை தூய்மையாக்குகிறார்கள். இன்னொரு குழுவினர் மலர்களைத் தொடுத்து மாலை கட்டுகிறார்கள் சில ஆண்கள் பழங்களை வெட்டி பஞ்சாமிர்தம் செய்கிறார்கள். ஊர் மக்கள் அனைவருக்கும் உணவு தயாரிக்கும் பணிகளை சிலர் மேற்பார்வை இடுகிறார்கள். இந்த கூட்டு முயற்சி எத்தனை ஆர்வத்துடனும் அன்புடனும் மேற்கொள்ளப்படுகிறது என்பது நேரில் பார்த்தவர்களுக்குத் தான் புரியும். மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு முன்பாக சர்க்கரை பொங்கலில் பாத்தி கட்டி நடுவில் குடம் குடமாக நெய் ஊற்றப்படுகிறது. சர குத்து விளக்கொளியில் அம்பாளின் அருள் தவழும் முகம் அந்த நெய்யில் பிரதிபலிப்பது கண்கொள்ளா காட்சி. இரவு உற்சவ மூர்த்தி மலர் அலங்காரத்துடன் ஊர்வலம் வருகிறது.
![]() |
![]() |
இவை தவிர ஆடி வெள்ளி தை வெள்ளி, வருடப் பிறப்பு, நவராத்ரி ஆகிய பண்டிகைகளும் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன. பணவளம் குறைந்திருந்தாலும் மனவளம் நிரம்பி வழியும் கிளாம்பாக்க மக்கள் தங்களால் இயன்றவரை தங்கள் கிராமத்துக்கு வந்துள்ள அம்பாளைப் போற்றி வழிபடுகின்றனர்.
இப்போது கோயில் நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களின் பொருளுதவியுடன் மஹா சாம்ராஜ்ய சாலினியான லலிதாம்பிகைக்கு ஓர் அழகான ஆலயம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ள மற்றும் ஆன்மீக நாட்டமுள்ள அனைவரும் இந்த திருப்பணிக்கு நிதியளிக்க முன்வரலாம். தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் 9551207784
இந்த பதிவைப் பார்த்த பின்னர் இந்த கோயிலை நேரில் சென்று காணவேண்டும் என்று விரும்புவோர் பின்வரும் கூகிள் வரைபட இணைப்பைப் பயன் படுத்திக் கொள்ளலாம். https://www.google.co.in/maps/place/SRI+LALITHA+MAHA+THIRIPURA+SUNDARI+AMBAL+TEMPLE/@13.1567652,79.4111196,9z/data=!4m5!3m4!1s0x3a528f7c71e782dd:0x274f6b809ab75217!8m2!3d13.1567652!4d79.9714224
செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு லலிதா திரிபுரசுந்தரி ஆலயத்திற்குச் சென்று அம்பாளின் அருளைப் பெற்று அவனியில் அனைத்து சுகங்களையும் அடைந்து அமோகமாக வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.
Great. How Blessed
பதிலளிநீக்குWe were fortunate to get to know this Temple from Mr.sathianarayanan, who is my neighbor. We had darshan along with satianarayan and his wife. Thatrubama ambal nam mun katchi allithal. Great vibration. Really great experience.
பதிலளிநீக்குGreat.ஆசீர்வதிக்கபட்ட தம்பதிகள்.உங்ஙள் தொண்டு சிறக்க வாழ்த்துகள்
பதிலளிநீக்குThanks for sharing the divine Darshan and Leela of the divine mother
பதிலளிநீக்கு