துவாரகை சோம்நாத் யாத்திரை
சைவமும் வைணவமும் சேர்ந்தே தழைத்து வந்த நாடு நம் நாடு. வடக்கே பத்ரி கேதார்,கிழக்கே பூரி புவனேஷ்வர்,மேற்கே துவாரகை சோம்நாத், தெற்கே வைணவக் கடவுளான ஸ்ரீராமபிரானே ஈஸ்வரனை பூஜித்த தலமான ராமேஸ்வரம் என நாட்டின் நான்கு மூலைகளுமே இதைப் பறை சாற்றுகின்றன. இந்தப் பதிவில் அரபிக்கடலின் அலைகள் அடிவருடிச் செல்லும் அருட்தலங்களான துவாரகை சோம்நாத் பற்றி சில தகவல்களைப் பார்க்கலாம்.
துவாரகை 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நகரம் எனக்கூறப்படுகிறது.கண்ணபிரான்,கொடுங்கோலனான தனது மாமன் கம்சனை வதம் செய்ததால் கோபமுற்ற கம்சனின்மாமனார்ஜராசந்தன், மதுரா நகரின் மீது மீண்டும் மீண்டும் படையெடுத்து வரவே,கிருஷ்ண பகவான் போர்க்களத்தை விட்டோடி துவாரகை நகரத்தை சென்று அடைந்ததாக ஒரு புராணக் கதை உண்டு.அதனால்தான் கண்ணனுக்கு ரண் சோட் ராய் என்ற பெயரும் வந்ததாகக் கூறப்படுகிறது. பரந்தாமனா பயந்தோடியது?இல்லை, ஜராசந்தனை வதம் செய்வதாக குந்தி மகன் பீமன் ஏற்கனவே சபதம் எடுத்திருந்ததால் பீமன் கையால்தான் அவன் சாகவேண்டும் என்று போர்க்களத்தை விட்டு ஓடுவது போல் நாடகம் ஆடினான் அந்த மாயக்கண்ணன்.பேட்த்வாரகை என்ற இடத்தை வந்தடைந்த வாசுதேவன் தேவலோகச் சிற்பியான மயனை அழைத்து அங்கு ஓர் அழகிய நகரை அமைக்குமாறு ஆணையிட்டான்.மயன், கடற்கடவுளை வேண்டி நகரம் அமைக்கத் தேவையான நிலத்தை கடலில் இருந்து மீட்டு, இரண்டே நாட்களில் தங்கமும் வைரமும் இழைத்த கட்டடங்கள் நிரம்பிய ஸ்வர்ண த்வாரகை என்ற ஓர் அழகிய நகரை நிர்மாணித்ததாகக் கூறப்படுகிறது.மாதவன் இவ்வையத்து வாழ்வை விட்டுவிட்டு வைகுண்டம் திரும்பியபிறகு கடலரசன் தான் அளித்த நிலத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு விட்டதால்தான் துவாரகை நகரைக் கடல் கொண்டுவிட்டதாகவும் நம்பப்படுகிறது.
துவாரகை யாத்திரை செல்வோர் பஞ்சத்வாரகைகளையும் தரிசித்துவிட்டுத் தான் செல்லவேண்டும். இவற்றில் தலையானது, ஜகத் மந்திர் என்று அழைக்கப்படும் துவாரகதீஷ் கோயில். மிகப் பழமையான கோயில்.இயற்கைச் சீற்றங்களுக்கும் இஸ்லாமியப் படைகளின் தாக்குதல்களுக்கும் ஈடுகொடுத்து இன்றளவும் இந்த கோயில் ஓங்கி உயர்ந்து நிற்கிறது என்றால் அது இறைவனருள் என்றுதான் சொல்லவேண்டும்.72 தூண்கள் தாங்க சுமார் 255 அடி உயரம் கொண்ட ஒரே கல்லிலான ஜகத் மந்திரில் 7 அடுக்குகள் உள்ளன.இவை சனாதன தர்மத்தில் புனித நகரங்களாகக் கருதப்படும் அயோத்யா, மதுரா, மாயா எனப்படும் ஹரித்வார்,காசி, காஞ்சி, அவந்திகா எனப்படும் உஜ்ஜயினி, துவாரகை ஆகியவற்றைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. துவாரகை கோயிலின் தனிச் சிறப்பு என்னவென்றால்,இங்கு ஒரு நாளைக்கு 5 முறை கொடியேற்றுகிறார்கள்.ஒரு குறிப்பிட்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தத் திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.கொடி காணிக்கை அளிப்பதற்கு பதிவு செய்து கொண்டு பலவருடங்கள் காத்திருக்க வேண்டுமாம்.52 கஜம் நீளம் கொண்ட கொடியில் சூரிய சந்திரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
|
ஆதி சங்கரர் கைலாயமலை சென்று சிவபெருமானிடமிருந்து பெற்ற 4 ஸ்படிக லிங்கங்களை ஜோஷிமத், துவாரகை, பூரி, ஸ்ருங்ககிரி என்று நாட்டின் 4 கோடிகளில் ஸ்தாபித்து 4 மடங்களையும் நிறுவியதாகக் கூறப்படுகிறது.இந்த நான்கு மடங்களில் பஸ்சிம்னாம்னாய சங்கர மடம் த்வாரகாதீஷ் கோயிலுக்குள்ளேயே அமைந்துள்ளது.மூலவர் சன்னதி தவிர மற்ற அனைத்து சன்னதிகளும் இந்த மடத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.சங்கர மடம் அமைந்துள்ள பகுதியில் அன்னை சாரதாதேவி, ஆதிசங்கரர் ஆகியோரின் படங்களும் பூஜாக்ருஹமும் உள்ளன.
துவாரகை கோயிலுக்கு மோக்ஷத்வார், ஸ்வர்கத்வார் என இரண்டு நுழைவாயில்கள் உள்ளன.கோயிலுக்குள் கைபேசி கேமிரா ஆகியவற்றை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.மோக்ஷத்வார் வழியாக உள்ளே நுழையும் முன் அவற்றை அதற்கான காப்பறையில் ஒப்படைத்துவிட்டுச் செல்லவேண்டும். நுழைந்தபிறகு மூலவரான த்வாரகாதீஷையும் அவருக்கு நேர் எதிரில் உள்ள அன்னை தேவகியையும் தரிசிக்க வேண்டும்.திருவாராதனம் அனைத்தும் முதலில் அன்னைக்கும் பின்னர் கண்ணனுக்கும் படைக்கப் படுகின்றன.அடுத்த சன்னதியில் வேணி மாதவர், பிறகு இடப்புறம் உள்ள கண்ணனின் புதல்வன் ப்ரத்யும்னன், பேரன் அனிருத்தன் நேர்ப்புறம் உள்ள தமையன் பலராமன், துர்வாச முனிவர் ஆகியோரையும் தரிசித்து விட்டு ஸ்வர்க்க வாயில் வழியாக வேளியேற வேண்டும்.எதிரில் கோமதி ஆற்றங்கரைக்கு இறங்க 54 படிகள் உள்ளன.இறங்கும் வழியில் சாக்ஷி கோபால் சன்னதிக்குச் சென்று நமது வருகையைப் பதிவு செய்த பின்னர் துலாபாரக் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து விட்டு மீதமுள்ள படிகளில் இறங்கி கோமதி ஆற்றை அடையவேண்டும்.புண்ய நதிநீரைத் தலையில் தெளித்துக் கொண்டு மீண்டும் படிகளேறி அதே ஸ்வர்க்க த்வார் வழியாக கோயிலுக்குள் நுழையவேண்டும்.பிரதட்சணமாக வரும்போது கிருஷ்ணரின் பட்டத்து ராணிகளான சத்யபாமா, ஜாம்பவதி, ராதிகா ஆகியோரையும் மஹாலக்ஷ்மி, சரஸ்வதி,லக்ஷ்மிநாராயணர், குசஸ்தலமஹாதேவர் ஆகியோரையும் வணங்கிவிட்டு மோக்ஷத்வார் வழியாக வெளியேற வேண்டும்.
பஞ்ச த்வாரகா வரிசையில் முதலில் உள்ளது மூல துவாரகை. ஏனெனில் மதுராவை விட்டு குஜராத் வந்தடைந்த கிருஷ்ணர் முதலில் இங்குதான் தங்கியிருந்தாராம்.சிறிய கோயிலாக இருந்தாலும், கணபதி, த்வாரகாதீஷ், ஸ்ரீராமர், ப்ரம்மா, சூரிய பகவான், நீலகண்ட மஹாதேவ், வாகீஸ்வரி அம்பாள், மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, தத்தாத்ரேயர்,கார்த்திகேயன் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.ஞானவாபி என்று பெயரிடப்பட்ட படிகள் கொண்ட கிணறொன்றும் அங்கு இருக்கிறது.இங்குதான் கண்ணபிரான் நீராடியதாக கல்வெட்டொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்து நாம் பார்க்கவிருப்பது பேட் த்வாரகா. சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே இங்கு ஒரு துறைமுகமும் மாடமாளிகைகள் நிறைந்த நகரமும் இருந்ததாக அகழ்வாராய்ச்சிகள் கூறுகின்றன. அதாவது மயன் நிர்மாணித்து பின் கடல் கொண்ட நகரம் இங்குதான் இருந்திருக்க வேண்டும்.துவாரகையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறு தீவுதான் பேட் த்வாரகா.30 நிமிடங்கள் படகில் பயணம் செய்துதான் இந்தத் தீவை அடைய முடியும்.பல படிகள் ஏறியபிறகு கோயிலை அடைகிறோம்.ரண்சோட் ராய், த்வாரகாதீஷ், த்ரிவிக்ரமர் ஆகிய தெய்வ சன்னதிகள் ஒரு மண்டபத்திலும் சத்யபாமா சன்னதி மற்றொரு மண்டபத்திலும் உள்ளன.
தொடர்ந்து நாம் செல்லவிருப்பது ருக்மணி த்வாரகா. இந்த கோயிலின் பின்னணியில் ஸ்வாரஸ்யமானதொரு கதை உள்ளது.கிருஷ்ணரும் ருக்மணியும் தங்கள் குருவான துர்வாசரை விருந்து படைக்க அழைத்துச் சென்றனர். அப்போது ருக்மணிக்கு தாகம் எடுத்தது. கிருஷ்ணர் தனது கால் நகத்தால் நிலத்தைக் கீறி கங்கை நீரை வரவழைத்து ருக்மணியின் தாகத்தைத் தீர்த்து வைத்தார். ஆனால் அதைக் கண்டு கோபமடைந்த துர்வாச முனிவர், ருக்மணி தனது கணவரைப் பிரிந்து அந்த இடத்திலேயே 12 ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டும் என்று சாபமிட்டாராம். 12 ஆண்டுகள் தனித்து வாழ்ந்த ருக்மணி பின்னர் முனிவரைச் சந்தித்து தன்னை மன்னிகும்படி வேண்டினாராம். மனமிறங்கிய துர்வாசர்,துவாரகையைத் தரிசித்தால் பக்தர்களுக்கு பாதி புண்ணியம் மட்டுமே கிடைக்கும் என்றும் ருக்மணி தங்கியிருந்த இடத்தைத் தரிசித்தால்தான் முழு புண்ணியம் கிடைக்கும் அன்று அருளினாராம். ருக்மணி தங்கியிருந்த இடத்தில் தான் ருக்மணி த்வாரகா கோயில் எழுப்பப் பட்டுள்ளது.இந்த கோயில் கலைநயம் மிக்க அழகான சிற்பங்களால் நிறைந்துள்ளது. அனுமனுக்கு மட்டும் தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த கோயிலைப் பற்றிக் குறிப்பிடத்தக்க மற்றோர் அம்சம் என்னவென்றால், இதுவும் ஜகத் மந்திரும் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன.
அடுத்து நாம் செல்லவிருப்பது முக்தி த்வாரகா.பரந்தாமன் தனது மானுட உடலைத் தியாகம் செய்த இடம் இது. மரத்தடியில் சாய்ந்து படுத்திருந்த பெருமானின் கால் விரலை மானின் வாய் என்று நினைத்து அம்பெய்திய வேடனை மன்னித்தருளும் கோலத்தில் அமர்ந்துள்ள மூலவர் கோயில் இது. பாலிகா தீர்த் என்றும் இந்த கோயில் அழைக்கப் படுகிறது. தமையன் பலராமன் கிருஷ்ணரின் உடலை சுமந்து கொண்டு சேஷநாக வடிவில் குகைக்குள் சென்று மாய்ந்த இடமும் அருகில் உள்ளது. கண்ணன் பரமபதம் புகும் முன் அவரது திருவடி பதிந்த இடமும் இங்கு காணப்படுகிறது.
அருகிலுள்ள மரம் த்வாபர யுகத்தில் இருந்து இன்று வரை பட்டுப்போகாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த மரம் இன்றளவும் பசுமையான இலைகளுடன் காட்சியளிக்கிறது.
போர்பந்தரை விட்டுப் புறப்பட்டு சோம்நாத் சென்று அடைந்தோம். இதுவும் அரபிக்கடற்கரையோரம் அமைந்துள்ள தலம்.சந்திர பகவான் தக்ஷ ப்ரஜாபதியின் 27 புதல்விகளை மணம்புரிந்து கொண்டதாகவும் ஆனால் அவர்களில் ஒருத்தியான ரோகிணியிடம் அதீத பிரியம் கொண்டு மற்ற மனைவிகளைப் புறக்கணித்ததாகவும் ஒரு புராணக் கதை கூறுகிறது. இதனால் இதர மனைவிகள் தங்கள் தந்தையிடம் போய் முறையிட்டபோது கோபமடைந்த அவர் சந்திரன் தனது ஒளியை இழக்கும்படி சாபமிட்டாராம்.வருந்திய கந்திரன் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்ததாகவும் சிவபிரான் நேரில் தோன்றி சாபவிமோசனம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. சந்திரபகவான் க்ருத யுகத்தில் இறைவனுக்கு பொன்னாலான கோயிலைக் கட்டியதாகவும், அடுத்து வந்த த்ரேதா யுகத்தில் ராவணன் வெள்ளியால் இந்தக் கோயிலைக் கட்டியதாகவும்,த்வாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சந்தன மரத்தால் இக்கோயிலைக் கட்டியதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. கலியுகத்தில் இக்கோயில் இஸ்லாமியர்களாலும் போர்ச்சுகீசிய ராணுவத்தினராலும் 17 முறைகள் இடிக்கப்பட்டதாகவும் மீண்டும் மீண்டும் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. தற்போதுள்ள கோயில் சர் வல்லபாய் பட்டேலின் முழுமுயற்சியால் உருவாக்கப்பட்டது.
சோமநாதர் ஆலயம் மிக நேர்த்தியாகப் பராமரிக்கப்படுகிறது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் இடப்புறம் விநாயகர், வலப்புறம் அனுமன் சன்னதிகள் உள்ளன. கருவறைக்குள் மூலவர் சோமநாதர், அவர் பின்புறம் அன்னை பார்வதி,வலப்பக்கம் சந்திரன் இடப்பக்கம் பிரும்மன் ஆகிய தெய்வங்கள் கோயில் கொண்டுள்ளனர்.கங்கை நீர் சிறிய பாட்டில்களில் விற்பனை செய்யப்படுகிறது.அந்த நீரை கருவறைக்கு வெளியே உள்ள குழாயின் வாயில் ஊற்றினால் எதிர் நுனி வழியாக வெளிவந்து லிங்கத்தின் மேல் அபிஷேகநீராகப் பொழிகிறது.கோயில் மண்டபத்தை விட்டு வெளியே வந்தவுடன் இடதுபுறம் வரிசையாக கண்ணாடி அறைகளுக்குள் ஒவ்வொரு ஜோதிர்லிங்க வரலாற்றையும் சித்தரிக்கும் காட்சிகள் சுதை சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், கோயிலின் தென்புறச் சுவர்க்கும் தென் துருவத்துக்கும் இடையே கடலைத் தவிர நிலப்பரப்பு ஏதுமில்லை.மாலை ஏழு மணிக்கு கோயில் வரலாறு பற்றி விவரிக்கும் ஒலி ஒளி காட்சி ஒன்று உள்ளது அனைவரும் தவறாமல் பார்க்கவேண்டிய காட்சி இது. ஆர்ப்பரிக்கும் அலையோசையும் அழகாக வர்ணனை கெய்யும் அமிதாப் பச்சனின் குரலோசையும் நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்று விடுகின்றன.
சோமநாதரை வணங்கி விடைபெற்ற பின் அடுத்த எட்டு மணிநேரத்தில் அஹமதாபாத்தை அடைகிறோம்.இந்த பயணம் இனிதே நிறைவு பெற்றதற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்லி சென்னை திரும்பினோம்.
வாழ்க வளமுடன்
கருத்துகள்
கருத்துரையிடுக